சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும், சுதந்திர ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் இன்று மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சசிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நான் ஓரு ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் நிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த நிகழ்வினை நான் நடாத்தியதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அறியக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு என்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் நாங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செயற்படவில்லை. பொலிஸார் ஊடக சுதந்திரத்தினை சிதைக்கும் செயற்பாடுகளை இந்த விசாரணைகள் மூலம் முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை என்ற அடிப்படையில் ஊடகத்துறை மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிரான குரல்கொடுக்க ஊடக அமைப்புகள் முன்வர வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.