அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல்
மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (03.02.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் இந்நாட்டில் தங்களின் 200 வருட வரலாற்று வாழ்க்கையில் சிதைக்கப்பட்டவர்களாகவும், பல்வேறு விதமான திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு முகம் கொடுத்த மக்களாக காணப்படுகின்றனர்.
மலையக மக்களின் வாழ்வியல்
இந்நிலையில் சலனமற்ற இனவழிப்பிற்கும் முகம் கொடுக்கின்றவர்களாகவும், அரசியலுக்கு தூரமாக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகின் நவீன அடிமைத்தனம்
தொடர்பில் தேடுவதற்காக இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்
பிரதிநிதி டொமொயா ஒபக்டா "மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும்,
தொழிலாளர் என்பதற்காகவும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டு இருக்கின்றனர்" என
இலங்கையிலிருந்தே கூறியதோடு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை
பேரவையிலும் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மலையக மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மட்டுமல்ல அவர்களின் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்களும் 75வது சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளாது சுதந்திரமற்ற மலையக மக்களின் ஆதங்கங்களையும், எதிர்ப்புகளையும் வெளிகாட்ட வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையம் கோரிக்கை விடுக்கின்றது.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பாரிய மக்கள் பேரணியும் முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார கொள்கையாலும், அரசியல்வாதிகளின் மக்கள் சொத்து கொள்ளை காரணமாகவும், வறுமைக்கு தள்ளப்பட்ட மக்கள் கொழும்பு தலைநகரம் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அறிவித்து அமைதி போராட்டங்களையும் ஆயத்தப்படுத்தியுள்ளனர்.
பிரஜா உரிமை
இனப்படுகொலை, தொடர் இன அழிப்பு என்பவற்றை சந்தித்து வரும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதே மக்களுடைய வேண்டுகோள்.
சுதந்திர இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத்திலேயே மலையக மக்களின் சுதந்திர வாழ்விற்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வாக்குரிமை சட்டம், தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டம் காரணமாக உழைத்து உரமான நாட்டில் அன்னியர்களாக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்திய, இலங்கை
ஒப்பந்தத்தின் காரணமாக பாரிய மனித உரிமை மீறலுக்கும் உட்பட்டனர். இதுவும் இன
அழிப்பின் முகங்களே.
கடந்த 1922ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெருந் தோட்டங்கள் அரசுடையாக்கப்பட்டபோது கிராமங்களை அண்டிய தோட்டங்களில் இருந்தோர் பலவந்தமாக தோட்டங்களை விட்டு துரத்தப்பட்டனர்.
பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அடையாளங்களை இழந்து அடையாளங்களை மறைத்து இன்றும் வாழ்வதைக் காணலாம். அதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தம் என உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பலவந்தமாக வறுமைக்குள் தள்ளப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் பசியின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து இறந்தனர்.
மலையக பிரதேசத்தில் வாழும் சூழ்நிலை இல்லாத காரணமாக வடக்கு, கிழக்குக்கு இடம்பெயர்ந்தோர் இன்றும் அரசியல் அனாதைகள் ஆகியுள்ளனர். இவர்களில் யுத்தம் காரணமாக பாதுகாப்புதேடி இந்தியாவிற்கு சென்றோர் முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 1987ஆம் ஆண்டு நாட்டின் நிர்வாகம், அபிவிருத்தி என்பவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளையும் அதன்மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய அபிவிருத்தி செயற்பாடுகளையும் அடைய முடியாத அளவிற்கு அதன் சட்டங்கள் மலையகப் பெருந்தொட்ட மக்களுக்கு எதிராக உள்ளது.
தேசிய இனமாக அங்கீகாரம் கோரும் மலையக மக்கள்
இவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கடந்த1889 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட மக்கள் தனியார் நிலங்களில் வாழுகின்ற மக்களாக இன்றும் கணிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். இவர்களுடைய வாக்குகள் தேவையாக இருக்கின்றது.
ஆனால் இவர்கள் வாழும் பிரதேசம் அபிவிருத்தி அடையக் கூடாது, அரச நிர்வாக சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கமாகும்.
இந்த சட்டங்கள் திருத்தப்பட்டு மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
