வவுனியா வைத்தியசாலையில் அதிகரித்து செல்லும் கோவிட் நோயாளர்கள் - ஒரு வாரத்தில் 6 மரணங்கள்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் மரணித்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரகாலத்தில் நோய் அறிகுறிகளுடன் கூடிய கோவிட் தொற்றாளர்கள் 184 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். , அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாகவும், 8 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளனர்.
தற்போது 70 இற்கும் மேலான கோவிட் நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதார அமைச்சின் புதிய சுற்று நிருபத்திற்கமைய "கோவிட் நோயாளர்களை வீடுகளில் வைத்து பராமரித்தல்" திட்டத்தின் பிரகாரம் 2-65 வயதிற்கு உட்பட்ட அறிகுறிகள் அற்ற நோயாளர்கள் அவர்களது வீடுகளில் வைத்தே பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் பிராந்திய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் குறித்த நடவடிக்கை திங்கள்கிழமை (16.08.2021) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 24 வாரங்களுக்கு உட்பட்ட கோவிட் தொற்றுக்குள்ளான அறிகுறிகளற்ற சிக்கலற்ற (Asymptomatic, Uncomplicated Pregnant Mothers) கர்ப்பவதிகளும் இச் சிகிச்சை முறைமைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில், மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டியது நமக்கும் நாம் சார்ந்த சமுகத்தினதும் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகும்.
அரசின் "தனிப்பட்ட முடக்கம்" (Individual Lockdown) கொள்கைக்கேற்ப, ஒவ்வொருவரும் அத்தியாவசிய தேவைகளின்றி வெளிச்செல்வதோ ஒன்றுகூடுவதோ தவிர்க்கப்பட வேண்டியதுடன், அத்தகைய கலாச்சாரம் மக்களிடையே கட்டியெழுப்பப்படுவதே நிலையான சுகாதார முன்னேற்றத்திற்கும், கோவிட் தொற்றை எதிர்கொள்ளவும் வழிவகுக்கும்.
எனவே மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளும் நெறிமுறையைக் கைக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்
.




