கொரோனாவின் கோரத் தாண்டவம்! இலங்கையின் நிலை என்ன
எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவு உயிர்கள் வாழும் இந்த பூவுலகில் மானிடராக பிறந்ததற்கு ஒரு முறையேனும் பெருமையும் கர்வமும் நீங்கள் கொண்டதுண்டா. நிச்சயமாக இந்த அண்டவெளியில் பரந்து கிடக்கும் பல்லாயிரம் கோள்களில், நவ கிரகங்களில் இந்த பூமியின் சிறப்பு அளப்பரியது.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று எமக்கு நன்கு பரிச்சையமான ஒரு கவி உண்டு. அதன்படி நாங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து எடுத்துக்கொள்ளாத வரப்பிரசாதங்களே இல்லை. அதற்கு யாரிடம் அனுமதி கேட்டோம்..?
அனைத்திலும் வெற்றிக்கொடி பறக்கிறது.. மருத்துவம், கண்டுபிடிப்பு, இலத்திரனியல், நவீனத்துவம் இப்படி ஒவ்வொரு துறையிலும் மனிதர்கள் அதிகப்படியான ஒரு வெற்றி இலக்கை அடைந்திருக்கின்றனர். இது அத்தனைக்கும் நாம் பெருமைக் கொள்ளத்தான் வேண்டும். கர்வமும் வேண்டும்.
இது இவ்வாறு இருக்க இன்றைய நிலை இவை அனைத்திற்கும் நேர்மாறாக மாறிப் போயிருக்கின்றது. இந்த உலகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய ஆங்காங்கே சில அழிவுகள் காலத்திற்கு காலம் நடந்து கொண்டிருந்தன.
மன்னர் காலத்தில் நடந்த படையெடுப்பு முதற்கொண்டு சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட உள்நாட்டு போர் என அநேகமாக மனித குலம் அழிவடைந்து வந்தது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இன்றைய நவீன உலகில் வளர்ந்து நிற்கும் தொழிநுட்பங்களையும் அசுர வளர்ச்சி கண்ட விஞ்ஞானத்தையும் கேள்விக்குள்ளாக்கி இன்று கோரத்தாண்டவம் ஆடுகிறது கொரோனா வைரஸ்.
உலகளவில் மில்லியன் கணக்கானவர்கள் செத்து மடிந்து போயுள்ளனர். கோடிக்கனக்கானவர்கள் உயிர்களைக் கையில் பிடித்து கொண்டு தனது வாழ்நாளின் இறுதி நாள் இன்றாகிவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலக வல்லரசுகள் முதற்கொண்டு அடிமட்டத்தில் இருக்கும் வறிய நாடுகள் வரை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றது.
பல நாட்டின் அரசியல் அதிகாரம், ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இந்த வைரஸ் மாறிவிட்டது.
முதலில் எமது நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்த வைரஸ், பின்பு எமது நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்த வைரஸ்.. ஆனால் இன்று எமக்கு மிக அருகில் ஏன் எமக்கு கூட இருக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.
இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் அவ்வப்போது உலகம் அழியப் போகின்றது என பல முன்னோர்கள் தீர்க்கதரிசனங்களை சொல்லி வைத்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிலவின.
ஏன், நாங்கள் புனித நூல்களாக போற்றும் பகவத் கீதை, குர்ஆன், திருவிவிலியம் போன்றவற்றிலும் உலக அழிவிற்கான அறிகுறிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை வைத்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் கூட இந்த கொரோனா வைரஸ் மூலம் வந்திருக்கும் பேரழிவு உலக அழிவின் தொடக்கப்புள்ளியோ என்ற அச்சம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கி காணப்படுகின்றது.
இவ்வாறான வாத பிரதிவாதங்கள் ஒரு புறம் செல்ல தற்போது மீண்டுமொருமுறை இலங்கையில் தனது ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்திருக்கின்றது இந்த கொரோனா வைரஸ்.
கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் தற்போது வரை சுழற்சிமுறையில் கொரோனா இலங்கைக்கு தனது சேவையை செய்கிறது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் இலங்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுவும் கடந்த சில தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இது அபாய நிலையில் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ள போதிலும் அண்மைய நாட்களில் முன்பை விடவும் இளம் வயதினர் அதிகளவில் பதிவாகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் எல்லா மட்டத்தினரதும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நாட்டில் தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளின் ஊடாக மிகுந்த சிரமத்துடன் பெப்ரவரி மாதமாகும் போது இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனாலும் அது முழுமையாக கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை. தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு மக்கள் தயாராகும் காலப்பகுதியில் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பிலான அசிரத்தையும் கவனயீனமும் மக்கள் மத்தியில் அதிகரித்தன.
குறிப்பாக புத்தாண்டுக்கு தயாராவதற்கு காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் இத்தொற்றுத் தவிர்ப்புக்கான சுகாதார நடவடிக்கையில் காட்டவில்லை.
புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தைகள், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியைப் பேணுவதிலும் முறையாக முகக்கவசம் அணிவதிலும் அக்கறை எடுத்துக்கொள்ளத் தவறினர்.
இதன் பின்விளைவு புத்தாண்டின் பின்னர் இத்தொற்று மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, பொதுச்சுகாதார பரிசோதர்கள் சங்கம் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் பல வழிகளில் அறிவுறுத்தல்களை வழங்கியும் அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை.
தமிழ் - சிங்கள புத்தாண்டு கடந்து ஒரு சில நாட்கள் கூட செல்லவில்லை. பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதுதான் இதுவும்.
இவை இவ்வாறிருக்க, வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கின்றது.
இதனை சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. 'தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களது எண்ணிக்கை மாத்திரமல்லாமல் ஒட்சிசன் தேவையுடையோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது' எனத் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம் 'இந்நிலை தொடருமாயின் அடுத்து வரும் இரண்டு மூன்று வாரங்களில் இத்தொற்று பேரழிவை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது' எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரும் புத்தாண்டுக்கு முன்னர் விடுத்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடிக்காததன் விளைவாகவே தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அடுத்துவரும் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலப்பகுதியில் மக்கள் உச்சக்கட்ட பொறுப்புடன் நடந்து கொள்வது அதி அவசியம்.
இந்த நிலையில் தினமும் 15 ஆயிரம் பேரை பி.சி.ஆர் பரிசோனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரைத் தனிமைப்படுத்தும் காலமும் முன்பைப் போன்று 14 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர, 'அடுத்துவரும் மூன்று வாரங்கள் ஆபத்தானவை என்றும் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உச்சளவில் பேணிக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிணநீர்த்தொகுதி மற்றும் மூலக்கூற்று அறிவியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் நிலிக்கா மாலவிகே, 'சிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் நாட்டில் திரிபடைந்த கொவிட் 19 தொற்றின் பரவுதலை அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியதாக உள்ளது. கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் இலங்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாக இவ்வதிகரிப்பை தற்போது அவதானிக்க முடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
எமது அண்டைய நாடான இந்தியாவின் இன்றைய நிலையை நாம் அனைவரும் அறிந்ததே. சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்ற புகைப்படங்கள் இந்தியாவின் நிலை அதள பாதாளத்திற்குள் கிடப்பதை உணர்த்துகிறது.
எதிர்காலம் என்ற ஒன்றிருந்தால் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் குழாயோடு உயிருக்கு போராடிய மனித இனம் இருந்தது என்று வரலாறு பேசும்.
மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள். மயான வாசல்களில் சடலங்கள் என்ற நிலையில் தான் இன்றைய பாரதம்.
அந்த நிலையை நாம் அடைய நாமே காரணம் என்று ஆகிவிடக் கூடாது.
முடிந்தவரையில் எம்மை நாம் பாதுகாப்பதோடு எமது அன்புக்குரியவர்களிடம் இருந்து சற்றே விலகி அவர்களையும் பாதுகாப்போம்.. வரலாற்றில் கொரோனா என்னும் கொடிய அரக்கனை வெற்றிகொண்ட இனமாய் பதியப்படுவோம்.