சிதைக்கப்பட்ட பிஞ்சுகள்! கொடூரத்தின் உச்சம் இதுவே(Video)
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று பல காலங்களாக வாய்மொழி மூலமான பல வார்த்தைகளை நாங்கள் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் இது போன்ற வார்த்தைகளும், கருத்துக்களும் வெறும் வாய் வார்த்தைகளாகவும், ஒரு போலி அக்கறையாகவும் மாத்திரமே இப்போது காண முடியும்.
அது உண்மையான அக்கறையா என்று கேட்டால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சமகாலத்தில் என்பதை விட ஆரம்பத்தில் இருந்தே சிறுவர்கள் மீதான வன்முறைகள் என்பது மிகக் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்து சமூக அக்கறையுடன் வாய் வார்த்தைகளால் எம்மால் கூற முடிகின்றதே தவிர அதனைத் தடுக்கவோ, அதற்கு எதிரான நடவடிக்கைகைள முன்னெடுக்கவோ நாம் திராணியற்றவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை.
அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்
உடல் ரீதியான, உணர்வு ரீதியான, உள ரீதியான துஷ்பிரயோகங்கள் தற்போது மிக அதிகரித்துள்ளதுடன், புறக்கணிக்கப்படலும் துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படுகின்றது.
பெற்றோர்கள் தங்களுடைய விருப்பங்களை பிள்ளைகளிடத்தில் திணிக்க முயற்சி செய்வதும், அதற்காக அவர்களை கட்டாயப்படுத்தல் வற்புறுத்தல் என்பனவும் துஷ்பிரயோகங்களே.
இவ்வாறான அணுகுமுறை உண்மையில் பெற்றோரிடத்தில் இருந்து சிறுவர்களை அன்னியப்படுத்துகின்றது. இதுவே பல துஷ்பிரயோகங்களுக்கும், அது குறித்து குழந்தைகள் வெளிப்படுத்த தயங்குவதற்கும் காரணமாக அமைகின்றது.
சிதைக்கப்படும் பிஞ்சுகள்
அத்துடன் இப்போது, மிக சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மிகக் கொடூரமான துயரங்களை தந்துவிட்டுப் போகக் கூடிய ஒன்று. நிச்சயமாக உயிரிழப்புக்களை தவிர்க்க முடியாத ஒன்றும்கூட.
சிறுவர்களை அவர்களின் அனுமதியின்றி உடல் உறுப்புக்களை தொடுதல், வருடுதல், ஆபாச வார்த்தைகள் பிரயோகம், வற்புறுத்தல் என்பன பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்குள் அடங்குகின்றது.
இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சிறுவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள். இவ்வாறான சிறுவர்கள் தமது அனுபவங்களை மற்றவர்களுக்கு செய்ய முற்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. ஆகவே அது எதிர்காலத்தில் ஒரு சிறந்த சந்ததியை கட்டியெழுப்ப தடையாகவே இருக்கும். அது சமூகத்தினதும் நாட்டினதும் எதிர்காலத்தை பாரியளவில் பாதிக்கும்.
இன்று எமது உலக நாடுகள், குறிப்பாக இலங்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அவலம் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
ஒவ்வொரு மணித்தியாலமும் எங்கோ ஓர் மூலையில் ஒரு சிறுமி அல்லது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இலங்கையில் நேர்ந்த அவலங்கள்
நாம் மிகவும் அறிந்த இலங்கையை உலுக்கிய புங்குடுதீவு வித்தியா முதல் ஐந்து வயதான சேயா சதெவ்மி, சிறிது காலத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சிறுமி நிதர்சனா, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த ஹிசாலினி வரை இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த பாத்திமா ஆயிஷா ஆகிய அனைவரும் எமக்கு உணர்த்திச் செல்லும் ஒரே பாடம் இந்த உலகு பெண் குழந்தைகளை, பெண் குழந்தைகளாகவே சந்தோசமாக வாழ வைக்க தகுதியற்றது என்பதேயாகும்.
உறவுகளால் நேரும் அவலம்
இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்தால், குறித்த சிறுமியரின், குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை சுற்றியுள்ளவர்களாலேயே அவர்கள் துஷ்பிரயோகத்திற்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பர்.
சிறுவர் வன்புணர்வு அநேகமாக வீடுகளிலும் அதனைச் சுற்றியுள்ள சூழலிலும் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக தம் உறவுகளாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்குப் பலியாகி கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம்.
தமது மாமன், மைத்துனன், அண்ணன், தந்தை என்று அவர்கள் அறியாமலும், அறிந்தும் சிறுவர்கள் இந்தப் துஷ்பிரயோகங்களுக்குப் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.
அதை தவிர்த்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளிலும், தாம் வாழும் சூழலிலும் தினம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
மிரட்டல்கள், பயமுறுத்தல், சின்ன அன்பளிப்புக்கள் மூலம் அவர்களை தம்வசப்படுத்திப் பின்னர் இவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சில சிறுவர்கள் தமது தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் உறவுகளாலேயே பணத்திற்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது சமகாலத்தில் அதிகரித்து வருவது சுட்டிக்காட்டத் தக்கது.
பாதுகாப்பற்ற சூழல்
தம்மை அறியாமலே தமது எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பலத்த கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.
ஒரு பிள்ளை இவ்வாறான வண்புனர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறினாலேயன்றி பொது மக்கள் இது குறித்து அறிந்து கொள்வது மிகக் குறைவு.
ஊடகங்களில் வெளிவராமல், பொது மக்கள் பார்வைக்கு புலப்படாமல் இன்னும் பல கொடுமைகளும் வண்புனர்வுகளும், துன்புறுத்தல்களும் அன்றாட வாழ்வில் குழந்தைகள் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் பெண் பிள்ளைகள் தனித்து வீட்டில் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் இவ்வாறான ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. வெளிச்சத்திற்கு வராதவை ஏராளம்.
பாடசாலை விடுமுறை நாட்கள், மேலதிக வகுப்புக்கள், உறவினர் வீடு, ஏன் தனது சொந்த வீடுகூட தற்போது சிறுவர்களுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அற்றது என்பதே நிதர்சனமான உண்மை.
பெற்றோர் மற்றும் உறவுகளின் உண்மையான கடமை
சிறுவர்களை சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடுவதும், அவர்களுக்குப் பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுப்பதும் பெற்றோரின் முதல்நிலை கடமையாக காணப்படுகின்றது.
இவ்வாறான வன்முறைகளை முற்று முழுதாக நிறுத்த முடியாவிட்டாலும், தவறுகள் நிகழாத வண்ணம் தடுக்க வேண்டியது சுற்றியுள்ள சமூகத்தினரின் தலையாய கடமை.
இலங்கையை உலுக்கிய ஆயிஷாவின் மரணம்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்ட நபர் வழங்கிய வாக்குமூலம், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த தான் முயற்சித்ததாகவும் ஆனால் பயத்தினால் சிறுமியை கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், அந்த நபர் மூன்று இளம் பிஞ்சுகளின் தந்தை என்பதுடன், அவரது மனைவி மீண்டும் கருத்தரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒட்டுமொத்தத்தில் இங்கு சிதைக்கப்பட்டது ஆயிஷா என்ற ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கை அல்ல, கருவில் இருக்கும் குழந்தையையும் சேர்த்து சந்தேகநபரின் மற்ற மூன்று பிள்ளைகளுடன், ஐந்து இளம் பிள்ளைகளின் வாழ்க்கை சிதைந்துபோயுள்ளது. அதிலும் ஆயிஷாவின் உயிர் பறிபோய்விட்டது.
கைது செய்யப்பட்ட நபர் சிறுமியின் உறவினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த நபர் சிறுமி ஆயிஷாவின் தந்தையுடன் இணைந்து போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், குற்றவாளி என்று நோக்குமிடத்து சந்தேநபரை மாத்திரம் குறிப்பிட முடியாது. முதலாவது குற்றவாளி அந்த தந்தை என்பதையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
சிறுமி ஆயிஷா உயிரிழந்த பின்னர் அவரது தந்தை நதான் இனிமேல் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடமாட்டேன் என அறிவித்திருந்தார். இது உருக்கமான அறிவிப்பாக இருக்கலாம், ஆனால் இப்போது அந்த கருத்து பொருந்துமா என்பதே கேள்வி.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
இன்னும் எத்தனை ஆயிஷாக்களை பார்க்கப் போகின்றோம்..
ஐந்து வயது சிறுமியையும் பெண்ணாக மட்டுமே பார்க்கும், ஒன்றரை வயது குழந்தையையும் வெறும் சதையாக மட்டுமே பார்க்கும், ஒரு தனிப்பட்ட நபரை பழிவாங்க பெண் பிள்ளையை வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்யும், ஆசிரியர் என்ற நிலையை மறந்து மாணவியரையும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சமூகம் இருக்கும் வரை ஒரு வித்தியா அல்ல, ஒரு சேயா அல்ல, ஒரு ஆயிஷா அல்ல இன்னும் பல வித்தியாக்களையும்,சேயாக்களையும், ஆயிஷாக்களையும் நாங்கள் எமது வாழ்நாளில் காணத்தான் போகின்றோம்.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தனி மனித மாற்றம் இல்லையெனில் இன்னும் பல கொடூரங்களை நாங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
