பிரித்தானியாவில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பும் தொற்று பாதிப்பும்! ஐந்து அடுக்கு கட்டுப்பாடுகளுக்கு செல்லும் அபாயம்
பிரித்தானியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் வெளியிடப்பட உள்ளன.
இதில் லண்டன் மற்றும் தெற்கின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஐந்து அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் அதிகமான பகுதிகள் - மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கில் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் நகர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை அதிகரித்து வருவதால், தலைநகரிலும் தெற்கின் பிற பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்வதும் இதில் அடங்கும் என்று கருதப்படுகிறது.
மார்ச் மாதத்தில் தொற்றுநோய் வெடித்ததில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பொருந்துகிறது. இருப்பினும் அவை அதிகாரப்பூர்வமாக ஐந்து அடுக்கு என்று அழைக்கப்படுவதில்லை.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் இன்று மட்டும் 53,135 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணித்தியாளத்தில் 414 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71,567 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,382,865 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஐந்து அடுக்கு கட்டுப்பாடுகளில் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம் என்ற காரணத்தால் பிரித்தானியாவில் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பின் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதன் காரணமாக கொரோனா தொற்றின் முழு பாதிப்பும் வெகுவாக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.