பால் மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க எதிர்பார்ப்பு
இலங்கையில், ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பால் மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய (Lakshman Weerasuriya) திருத்தப்பட்ட விலைகள் அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பால் மா பற்றாக்குறை அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும்,தங்கள் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட ஏறத்தாழ 300,000 தொன் பால்மா தற்போது துறைமுகத்தில், தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால்மா விலை அதிகரிக்கப்படாமைக் காரணமாக, உள்ளூர் இறக்குமதியாளர்களுக்கு இந்த ஆண்டில் மாத்திரம் 1,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையை தீர்க்க பால் மாவை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.