இலங்கையில் தொலைத்தொடர்பு வரி வருவாய் அதிகரிப்பு: கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை பணம்
2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 29.4 வீதத்தால் 13.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி வருவாய் 10.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, ஜூன் 1, 2022 முதல் தொலைத்தொடர்பு வரி விகிதம் 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக திருத்தப்பட்டமையே இதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் (2023) முதல் ஆறு மாதங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி மற்றும் கைப்பேசிகளின் எண்ணிக்கை முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளது.
2023 முதல் ஆறு மாதங்களில் தொலைப்பேசி இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.0 சதவீதம் குறைந்து 21.9 மில்லியனாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.
2023 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில், 100 பேருக்கு கைப்பேசிகள் மற்றும் பிற தொலைபேசிகளின் எண்ணிக்கை 6.8 சதவீதம் குறைந்து 137 ஆக உள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |