எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் குறையும் சாத்தியம்
வரி திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்து வருகின்ற நிலை மற்றும் நாட்டில் நிலவும் மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அரசாங்கத்தினால் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அடுத்த வருடத்திற்கான நிதியை அரசாங்கம் திரட்ட வேண்டியுள்ளது
அத்துடன் மேற்கொள்ள இருக்கும் வரி அதிகரிப்பின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
வற் வரி திருத்தத்தின் மூலம் தற்போது 15 வீதமாக காணப்படும் வற் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 97 பொருட்களுக்கான வற் வரி விலக்களிப்பை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம் அத்துடன் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 65 பில்லியன் ரூபாவை அடுத்த வருடத்தில் 209 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அதற்காக உலக வங்கி நிதியுதவியை வழங்கி வந்துள்ள நிலையில் அடுத்த வருடத்திற்காக அந்த நிதியை அரசாங்கம் திரட்ட வேண்டியுள்ளது.
தற்போதுள்ள 9.1 வீத தேசிய உற்பத்திக்கு ஏற்ப அரசாங்கத்தின் வருமானத்தை அடுத்த வருடத்தில் 12.5 வீதமாக அதிகரித்துக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
அத்துடன் 2025 ஆம் ஆண்டில் அதனை 15 வீதம் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதுடன் அதற்கான பொருளாதார மறுசீரமைப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் 20 வீதத்திற்கும் 80 வீதத்திற்கும் இடைப்பட்ட நிலையில் காணப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிவீதம் தற்போது 30 வீதத்திற்கும் 70 வீதத்திற்கும் இடைப்பட்டதாக வந்துள்ளதுடன் அதில் மேலும் திருத்தம் செய்வதற்கான யோசனை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பாடசாலை உபகரணங்கள் அரிசி, மா, சோளம், மரக்கறி மற்றும் பால் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்தும் வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த திருத்தங்களோடு பணவீக்கம் 1.5 வீதத்திலிருந்து 2 வீதம் வரை அதிகரிக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |