அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு- ரணிலின் துணிச்சலான முடிவென்று புகழாரம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியமை மிகவும் துணிச்சலான அறிக்கை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போது, பணவீக்கம் உயரும் போது, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் போது, நிரந்தர வருமானம் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதில் அரச உத்தியோகத்தர்களே பிரதானமாக உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
அத்துடன் அவர்கள் மிகவும் அசௌகரியமாக இருப்பதனை காண முடிகின்றது. ஒரு வருடத்திற்கு முன்னர் அரச உத்தியோகத்தர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவரின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதே பெரும் சவாலாக இருந்தது. நாட்டில், அரச ஊழியர் சம்பளம் இரண்டு முறை பிரித்து வழங்கப்பட்ட நாட்டில், அரச தலைவரின் அறிவிப்பானது கடினமான ஆனால் தைரியமான அறிவிப்பாகும்.
அதற்கமைய, 14 லட்சம் அரச ஊழியர்கள் மற்றும் 06 லட்சம் ஓய்வூதியர்களின் சம்பளம் மாதாந்தம் 10.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும் அதற்கு இரண்டு கோடி ரூபா மேலதிகமாக தேவைப்படும்.
அவர்களின் சம்பளம் மாதாந்தம் 100.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு மாதாந்தம் 20 கோடி ரூபா மேலதிகமாக தேவைப்படும்.
சம்பள அதிகரிப்பு
மாதம் 1000 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின், மாதாந்தம் 2 பில்லியன் ரூபா தேவைப்படும்.
எவ்வாறாயினும், அரசாங்கம் அந்த அனைத்து சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.