ஏற்றுமதி வரி அதிகரிப்பு தொடர்பில் ஹர்ஷ டி சில்வா நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு வருமான சட்டமூலத்தின் பிரகாரம் ஏற்றுமதி வரி அதிகரிப்பு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது நிதிக்குழுவின் தலைவர் எம்.பி ஹர்ஷ டி சில்வா நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொது நிதி தொடர்பான குழு அண்மையில்,நாடாளுமன்றத்தில் கூடி உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தை மீளாய்வு செய்த போதே அதன் தலைவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு துறைக்கும் 14% முதல் 30% வரையிலான வரி அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாயைக் குறிப்பிடுமாறு நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இந்த குழு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்றுமதி வரி அதிகரிப்பு
ஏற்றுமதி வரிகளை உயர்த்துவதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான குறுகிய கால முயற்சிகளுக்கு பதிலாக, நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் ஏற்றுமதியாளர்களை சங்கடப்படுத்தாமல், ஏற்றுமதி வரிகளை வசூலிக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தற்போதைய நிலைமைகளுடன்
ஒப்பீட்டு பகுப்பாய்வை முன்வைக்குமாறும், ஹர்ஷா தலைமையிலான குழு
அதிகாரிகளுக்கு அறிவித்தது.