அரச பெண் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்! திருகோணமலையில் சம்பவம்
கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் (28.03.2023) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஊர்மிளா கிருபாகரன் (45 வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது.
பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு
திருகோணமலை - சமுத்ராகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு சென்று அறிவுறுத்தல் வழங்கிய போது பெண் உத்தியோகத்தரை தாக்கியதுடன் அவருடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரை
தொலைபேசி மூலம் பல தடவைகள் தொடர்புகொண்ட போதிலும் அவர் அவ்வழைப்பை ஏற்காமல்
துண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.