முல்லைத்தீவில் இப்படியுமொரு வீதியா..! பொறுப்பை உணராத அதிகாரிகள்
பயணிக்க முடியாதபடி பாதையில் நீர் தேங்கியிருப்பதோடு அதற்குள் கற்களும் உள்ள பாதை ஒன்றினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு தண்ணீரூற்றில் முஸ்லிம் தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் பிரதானமான பாதையிலேயே இந்த அசௌகரியம் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு இடத்தில் பாதை முழுவதும் நீர் நிரம்பி பயணிக்க முடியாதபடி இருப்பதை அவதானிக்கலாம்.அத்தோடு இந்த நீருள்ள இடங்களில் பாதையின் மட்டத்திலிருந்து தாழ்வான குழிகள் கொண்டவையாகவும் அவை இருக்கின்றன.
பனை இடைவெளியால் பயணம்
பெரியளவில் கலங்கல் நீர் தேங்கியுள்ள இடத்தில் வீதிக்கு அருகிலுள்ள மதிலுக்கும் பனைமரத்திற்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியின் ஊடாக சிரமங்களுக்கு மத்தியில் ஈருருளி மற்றும் உந்துருளிகளில் பயணிப்போர் சென்று வருகின்றனர்.
இவ்வாறு தனித்து பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் இந்த குறுகலான வீதியை பயன்படுத்தி வருவதையும் குறிப்பிடலாம்.
பனை மரத்தோடு உள்ள நீர் இன்னமும் வற்றாது இருப்பதோடு அந்த இடத்திற்கு முன்னால் உள்ள இடத்தில் நீர் தேங்கி இருந்து வற்றியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
அக்கறையற்ற கிராம பொது அமைப்புகள்
இந்த நிலை கடந்த மாரி காலம் முதல் இன்று வரை நீடித்து வருவது மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவருக்கும் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பொது அமைப்புக்கள் பாராமுகமாக இருந்து வருகின்றன என்பதை இந்த வீதியின் நிலைமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
கிராமிய பொது அமைப்புகள் தங்களுக்குள் கிராமிய உட்கட்டமைப்புக்களை சீராக பேணிக் கொள்ளும் பொறுப்புணர்வோடு இயங்கி வந்திருந்தால் இங்கு சுட்டிக் காட்டப்படும் இடத்தின் சீரின்மையை அவர்கள் கண்டு கொண்டிருப்பார்கள்.அவர்கள் கவனத்துக்கு இது வந்திருந்தால் அவர்களாலேயே சீர் செய்துகொள்ள முடிந்திருக்கும் என்பது திண்ணம்.
கிராம சேவகர் பொறுப்பு
தண்ணீரூற்று கிழக்கு கிராமசேவகர் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாக இப்பகுதியினை பயணி ஒருவர் அடையாளப்படுத்தி இருந்தார்.
தண்ணீரூற்று கிராமம் ஒன்றுக்கு மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிராம சேவகர் ஒருவரால் கட்டுப்படுத்தக் கூடியதாக கிராமிய பொது அமைப்புகள் இருந்து வரும் ஒரு சூழலில் கிராமசேவகரின் கவனத்துக்கு இந்த பாதையின் நிலைமை எட்டாதது ஆச்சரியமான விடயமாகும்.
அவ்வாறு கிராமசேவகர் இந்த பாதையின் இப்போதைய நிலைமையினை கண்ணுற்று இருந்தால் தற்காலிகமாகவேனும் பொது அமைப்புக்களையும் தன்னார்வ சமூக சேவகர்களின் உத்திகளையும் ஒருங்கிணைத்து சீர் செய்ய முயன்றிருக்கலாம்.ஆனால் அது இன்றுவரை நடைபெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
