எப்போது வெடிக்கும் இலங்கையின் பொருளாதாரம்? எழுப்பப்பட்டுள்ள கேள்வி
“இலங்கையின் பொருளாதாரம் எந்த நேரத்தில் வெடிக்கும்” என்று கூற முடியாது என்று ஜப்பானிய செய்தித்தாள் ஒன்று தொிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாளொன்றுக்கு 30 இலட்சம் பிரதிகள் விற்பனை செய்யப்படும் “நிக்கி ஏசியா” என்ற ஜப்பானிய செய்தித்தாளே இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால், வழங்கப்பட்ட வரிச்சலுகையால் இழக்கப்பட்ட வருமானத்தை ஈடு செய்ய மத்திய வங்கியினால் பெருமளவு பணம் அச்சிடப்பட்டுள்ளது.
எனவே எப்போது இலங்கையின் பொருளாதாரம் வெடிக்கும் என்ற கேள்வியை குறித்த செய்தித்தாள் எழுப்பியுள்ளதாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.