ஆசிரியர் ஆலோசகர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்திய இம்ரான் மஹ்ரூப் எம்.பி
ஆசிரியர் ஆலோசகர்கள் பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றுமுன்தினம்(09.07.2026) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கல்வித் துறையில் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களுக்குப் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதிலும் ஆசிரியர் ஆலோசகர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.
எனினும், நீண்டகாலமாக இந்தச் சேவையில் உள்ளவர்கள் பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
1. 2182/36 (2020.07.01) ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி உருவாக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையைச் (SLTAS) சேர்ந்த உத்தியோகத்தர்களின் சேவை தொடர்பாக பின்வரும் தகவல் வெளிப்படுத்தப்படல் தொடர்பாக வர்த்தமானி 2182/36 இன்படி மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை 4471 ஆகும். தற்போது இச்சேவையிலுள்ள மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை எத்தனை? கிழக்கு மாகாணத்திற்கு சிங்களம் தமிழ் மொழி உட்பட 466 இதில் தற்போதுசேவையிலுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனை?
2. ஏன் இதுவரை இச்சேவைக்கான போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்படவில்லை?
3. 10/2025 இன்படி பதவி நிலை உத்தியோகத்தர்கள் மட்டத்தலுள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கான வரப்பிரசாதங்கள் என்ன ? இவர்களின் பதவிக்கான அடிப்படை சம்பளம் மற்றும் சம்பள உயர்ச்சியின் முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதா?

4. முன்னோடி வேலைத்திட்டத்தின் படி பாடசாலை தரிசிப்பினை மேற்கொள்ளும் இவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு நாடுபூராக மாறுபட்டுக் காணப்படுகின்றமை ஏன்?
5. 10/2026 இன் படி இவர்களுக்கு மோட்டார் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா?
6. SLTAS-I இன் பின்னர் இச்சேவையைச்சேர்ந்தவர்கள் மூப்பு அடிப்படையில் கல்வி நிருவாக சேவைப்பரீட்சைக்கு தோற்ற முடியுமா?
7. இவர்களுக்கான சம்பளம் தேசிய நிதி ஒதுக்கீட்டின்படி வழங்கப்படுகின்றதா அல்லது மாகாண நிதியிலிருந்து வழங்கப்படுகின்றதா?
8. இவர்களுக்கான இடமாற்றம் வலயங்களுக்கிடையில் இடம்பெறுமா அல்லது வலயத்தின் கோட்டங்களுக்கிடையில் இடம்பெறுமா?
9. SLTAS-II இல் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு SLTAS-I கான பதவி உயர்வு இன்னும் ஏன் வழங்கப்படவில்லை?
10. இவர்களின் நிர்வாக செயற்பாடு மேற்கொள்ளப்படுவது மத்திய கல்வி அமைச்சா? அல்லது மாகாண கல்வி அமைச்சா? ஆசிரியர் ஆலோசகர் சேவையிலுள்ள இந்தப் பிரச்சினைகள் காரணமாக ஒட்டுமொத்த பாடசாலைக் கல்வி மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பாக சிறந்த தீர்வொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுகொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! சந்தேகநபராக மீண்டும் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த