கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்க இம்ரான் எம்.பி கோரிக்கை
கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெர்னாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள கோரிக்கைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கிண்ணியா கல்வி வலயத்தில் கடமை புரிந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இருவர் பதில் உத்தியோகத்தர் இன்றி சமீப காலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் இங்கு நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. 66 பாடசாலைகளையும், சுமார் 1300 ஆசிரியர்களையும் கொண்ட இவ்வலயத்தில் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட 3 கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமை புரிகின்றனர்.
10க்கு மேற்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடம் இங்கு உள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இங்கு எதிர் நோக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு இங்கு நிலவும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகவும், எனினும் முடியுமானவரை இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது செயலாளர் தெரிவித்துள்ளார்.




