இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடு
நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
“சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை போலி வர்த்தகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் செயற்பாடாகும்.
சதொச விற்பனை நிலையங்களில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 108 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 128 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள் மற்றும் தேங்காய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் குறிப்பிட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கொள்முதல் செய்வதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏனைய அனைத்துப் பொருட்களும் சந்தை விலைகளை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.