2019ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டை கொள்வனவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சிம் அட்டையின் பதிவு தொடர்பான விதிமுறைகளைச் சீர்திருத்தி, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1991 இலக்கம் 25 இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ், 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் 2 அன்று சிம் அட்டை பதிவு தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
எனினும், இந்த விதிகள் அந்தத் திகதிக்குப் பின்னர் விற்பனை செய்யப்பட்ட சிம் கார்டுகளுக்கு மட்டுமே இதுவரை பொருந்தின.
சிம் அட்டை
இதனால், 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக சிம் அட்டைகளை பெற்ற பல வாடிக்கையாளர்களின் துல்லியமான தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லை.

இது சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றப் புலனாய்வு விசாரணைகளின் போது பெரும் சவாலாக அமைந்துள்ளன.
இதனைச் சரிசெய்வதற்காக பழைய சிம் அட்டை உரிமையாளர்களின் தகவல்களை மீண்டும் பதிவு செய்ய புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறை
மேலும், 16 - 17 வயதுக்குட்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்தல் மற்றும் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சிம் அட்டை வழங்குவது தொடர்பான புதிய சட்டங்களை சேர்ப்பதன் மூலம் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தற்போதுள்ள விதிமுறைகளைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும், 2019.08.02 திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகள் தொடர்பான சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், தற்போதுள்ள சந்தாதாரர் சிம் அட்டை பதிவு விதிமுறைகள் பொருத்தமான வகையில் திருத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.