நாட்டு மக்களுக்கு ஓர் அவசர அறிவுறுத்தல் (VIDEO)
கேகாலை, ரம்புக்கனை - தொம்பேமட பிரதேசத்தில் மண்சரிவில் 3 பேர் இன்று உயிரிழந்திருந்த நிலையில், மண்சரிவு தொடர்பில் நேற்றைய தினமே குறித்த குடும்பத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயும், 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ள அதேவேளை தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மண்சரிவு அபாய நிலை காணப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை குறித்த இடத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டது.
அங்கிருந்து இரு குடும்பங்கள் வெளியேறிய நிலையில் மண்சரிவில் பாதிப்பிற்கு இலக்கான குடும்பம் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை.
குறித்த இடம் அபாயகரமான பகுதி என பல முறை அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்று அங்கிருந்து வெளியேறாத குடும்பத்தினரே சம்பவத்தில் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் பதிவாகி வருகின்றன.
என்ற போதும் அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டடங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் என்பன முன்னெச்சரிக்கைகளையும், சிவப்பு மற்றும் அபாய எச்சரிக்கைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த திணைக்களங்கள் செயற்பட்டு வருவதுடன் மக்களை பாதுகாப்பதற்கான சகலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை நாட்டில் அனர்த்த நிலைமைகளில் சிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினரும் தமது உயிரையும் கருத்தில் கொள்ளாது களப் பணிகளுக்காக களமிறங்கியுள்ளனர்.
அத்துடன், திடீரென அனர்த்தங்களை எதிர்கொள்ளும் கொள்ளும் மக்கள் விரைவாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளும் வகையில் 117 என்ற தொலைபேசி இலக்கமொன்றும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றி அதற்கேற்றாற் போல் செயற்பட வேண்டியது நாட்டு பிரஜைகளாகிய அனைவரதும் கடமையாகும்.
என்ற போதும் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றாது எமது உயிரை நாமே அபாய நிலைக்கு உட்படுத்துவது மிகவும் தவறான விடயம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தயவு செய்து வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றி கொள்வதற்கு தேவையான மிகச் சிறிய வழிகாட்டலையும் கூட மிகவும் அர்ப்பணிப்புடன் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
மேலும் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் ஊடகங்களில் உடனுக்குடன் வெளியிடப்படும் நிலையில் தொடர்ச்சியாக செய்திகளை பின்பற்றி வருவது மேலும் சிறந்தது.




