வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கான முக்கிய தகவல்! சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்படும் சலுகை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரியவருகிறது.
வீடுகளை கொள்வனவு செய்ய சலுகை
அதன்படி டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இவ்வாறு டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.
வழங்கப்படும் வாய்ப்பு
அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் தகவல்
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும், அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.