அதிகரிக்கும் இறக்குமதி: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நாட்டின் இறக்குமதி கடந்த ஆறு மாதங்களில் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், குறித்த அதிகரிப்பு எதிர்கால பொருளாதார தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியங்கள் காணப்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அத்தோடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுக் கொண்டிருக்கும் நாட்டுக்கு எதிர் காலத்தில் சுமையாக மாறும் சூழ்நிலை உருவாகலாம் என அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் இறக்குமதிச் செலவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
அதிகரிக்கும் இறக்குமதி
மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான காலப்பகுதியில் மொத்த இறக்குமதிச் செலவு 9.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 12.4 சதவீத வளர்ச்சியாகும். ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான காலப்பகுதியில் மொத்த இறக்குமதிச் செலவு 8.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
மேலும் 2025இல் பதிவு செய்யப்பட்ட இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
வாகன இறக்குமதி
இந்த வளர்ச்சியைப் பாதித்த முக்கிய காரணிகளில் ஒன்று வாகன இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும். 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிச் செலவு 475 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட வாகன இறக்குமதிக்கு அதிகப் பணம் செலவிடப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
மேலும், மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2025 ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதிச் செலவு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தத் தகவல் இறக்குமதி செலவினத்தில் தொடர்ச்சியான மேல்நோக்கிய போக்கைக் குறிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



