300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படுகின்றது! அரசாங்கத்தின் அறிவிப்பு
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (07) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட அரசு பல்வேறு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது. பெரும்பான்மை மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தொகை அதிகரிப்பு
புதிய வரிகளை அறிமுகப்படுத்தி, வட்டி விகிதங்களை உயர்த்தி, இறக்குமதி கட்டுப்பாடுகளை அதிகரித்து, வருமான அளவை உயர்த்தவும், அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அரசு எடுத்த முடிவுகளின் பலன்கள் ஏற்கனவே கிடைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் தொகை அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட பணம் 24.9 மில்லியன் டொலர்கள் மற்றும் இந்த வருடத்தின் அதே காலப்பகுதியில் இலங்கைக்கு 45.4 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
பணவீக்கம் 70% லிருந்து 25.5% ஆக குறைந்துள்ளது. அந்நிய கையிருப்பு 3 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. வங்கி வட்டி விகிதங்களும் 2.5% குறைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தின் பலனையும் மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த தடைகள் நீக்கப்படும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |