300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்த அரசாங்கம்! ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பு விசனம்
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட HS தயாரிப்புக் குறியீடுகளை கொண்ட 300 பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய, அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானம், இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்புடன் (SLUNBA) கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அந்த கூட்டமைப்பின் தலைவி தன்யா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் தந்த அவர், HS தயாரிப்புக் குறியீடுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள துணை உள்ளடக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
அச்சுறுத்தல்..
வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர், கட்டுமானம், விவசாய வணிகத் துறை மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இலங்கையின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன, அனைத்து வணிகங்களிலும் 80% பங்களிப்பை வழங்குகின்றன.
இவை பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மற்றும் பல்வேறு திறன்களைக் கொண்ட, திறமையான, மற்றும் திறமையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
அந்த நிறுவனங்கள் 35% வேலைவாய்ப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 300 நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய தீர்மானித்தவர்கள் நாட்டின் உள்ளூர் உற்பத்தியை உணரவில்லை.
ஒரு ட்ரில்லியன் ரூபா அச்சிட தீர்மானம்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இயக்குவதற்கு, நாட்டில் மூலப்பொருட்களை உள்ளூர் உற்பத்தி செய்யமுடியாது என்று அவர் கூறினார்.
எனவே அரசாங்கம் வர்த்தமானியை இரத்துச் செய்து, கலந்துரையாடலின் பின்னர் இறக்குமதி வரம்புகளை மீள நடைமுறைப்படுத்த வேண்டும் என தன்யா அபேசுந்தர தெரிவித்தார்.
இல்லையெனில் 4,500 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 4.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாத நிலை ஏற்படும்.
அரச துறையின் சம்பளம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பராமரிப்புக்காக ஒரு
டிரில்லியன் ரூபாயை அச்சிட அரசாங்கம் யோசித்து வருகிறது, ஆனால் நாட்டின்
முதுகெலும்பாக செயல்படும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்க எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று அவர் கூறினார்.