அறிவிக்கப்பட்ட தடையில் திருத்தம்! இலங்கையில் வழங்கப்படும் அனுமதி
இலங்கையில் இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தால் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது.
300 பொருட்களுக்கு இறக்குமதி தடை
300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது.
வழங்கப்படும் அனுமதி
இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை கடந்த மாதம் விதிக்கப்பட்டிருந்தது.
ரணிலின் அறிவிப்பு
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.