தீவிரமடையும் போராட்டங்கள்! பயங்கரவாதச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டம்: பாரிய அழிவு ஏற்படும் என எச்சரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் நடைறைப்படுத்துவதாக வெளியான தகவலை அடுத்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாரிய அழிவை நோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும்
தற்போது சிந்தித்து செயற்படாவிட்டால் பாரிய அழிவை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும். தற்போது நாம் அழிவின் விளிம்பிலேயே இருக்கின்றோம்.
காரணம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று சபாநாயகர் கடந்த 9 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
எனினும் இதுவரையில் (இன்று நண்பகல் வரை) அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அடக்குமுறைகளினால் மக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டம்
அத்தோடு நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தையும் , மேல் மாகாணத்தில் ஊரடங்கினையும் நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருக்கின்றார்.
இதற்கு மத்தியில் பயங்கரவாத தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தவறானதொரு செயற்பாடாகும்.
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து அடக்குமுறைகளின் ஊடாக போராட்டங்களை முடக்குவதற்கு முயற்சித்தால் அது பாரிய அழிவினையே ஏற்படுத்தும்.
எனவே மக்களின் குரலை செவிமடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகின்றோம். பாதுகாப்பு தரப்பினரையும் மக்களுக்கு சார்பாக செயற்படுமாறு கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.