இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு (Video)
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 47 குடும்பங்களை சேர்ந்த 164 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறியிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர், ஏறாவூர், படுவான்கரை ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் தொடக்கம் கடும் மழைபெய்துவருகின்றது.
இதன் காரணமாக தாழ்வுப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதுடன் வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மாணவர்களும் நகருக்குவருகைதந்தோரும் பெரும் சிரமத்திற்குள்ளானதை காணமுடிந்தது.







