மனித இம்யூனோகுளோபுலின் மோசடி : தள ஆய்வுக்கு விரையும் அதிகாரிகள்
மனித இம்யூனோகுளோபுலின் மோசடியில் தொடர்புடைய உற்பத்தி தள ஆய்வுக்காக, தடுப்புக்காவலில் உள்ள அதன் உரிமையாளருடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் இரண்டாவது தடவையாக எதிர்வரும் திங்கட்கிழமை செல்லவுள்ளனர்.
ஏற்கனவே இந்த உற்பத்தி தளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட அதன் உரிமையாளர், அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் அடுத்த விசாரணை ஜனவரி 24 ஆம் திகதி நடத்தப்படுவதற்கு முன்னர் இரண்டாவது தடவையாக உற்பத்தி தளத்துக்கு சென்று ஆய்வு நடத்துமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இந்த ஆய்வின்போது உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் வைக்கப்பட்டுள்ள Isolez Biotech Pharma AG (Pvt) Ltd இன் உரிமையாளர் சுதத் ஜானக பெர்னாண்டோ, ஏற்கனவே உற்பத்தி தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பிரதான மின்சார ஆளி எங்கே என்று தனக்கு நினைவில் இல்லை என்று கூறியிருந்தார்.
இரண்டாவது ஆய்வு
எனவே உற்பத்தி தளத்தில் மின்சார வெளிச்சம் இன்மைக் காரணமாக அந்த ஆய்வுப்பயணம் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் மீளத்திரும்பினர்.
இந்தநிலையில், உற்பத்தித்தளத்தின் வளாகத்தில் மின்சாரத்தை ஒளிரச் செய்வதற்கு சீதுவையில் உள்ள இலங்கை மின்சாரசபை அலுவலகத்தின் பொறியியலாளர் ஒருவரின் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது.
இதன்படி உற்பத்தித்தளம் மீதான இரண்டாவது ஆய்வின்போது அதிகாரிகளுடன் மின்சாரசபையின் அதிகாரிகளும் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த உற்பத்தித்தளத்தின் ஆய்வுப்பயணம் குறித்த அறிக்கையை அதிகாரிகள் எதிர்வரும் 24ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |