புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசு எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
புலம்பெயர் அமைப்பு
எனவே, புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசு எத்தனை மில்லியன் அல்லது பில்லியன் டொலர்கள் நிதியுதவி பெற்றுள்ளது என்பதையும், இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக அவை எந்தளவுக்கு நிதி உதவிகளை வழங்கின என்பதையும் அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இன்று புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து ஒரு சதமும் கிடைக்காது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அவ்வாறெனில், இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது, அது எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.
தற்போது இந்த நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் தேசிய அடையாளத்தை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சித்து வருகின்றன என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுகின்றது.
குறிப்பாக, புத்தசாசனத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் பாரம்பரிய மத மற்றும் கலாசார அடித்தளங்களை சீர்குலைக்கவும் சில தரப்புகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீலரத்ன தேரர் சவால்
புலம்பெயர் அமைப்புகளுக்கு இவ்வளவு பெரியளவில் நிதி எங்கிருந்து கிடைக்கின்றது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படுகின்றன என்பதும் ஆராயப்பட வேண்டும்.
நாட்டின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம். இந்த நாட்டை வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உண்மையில் நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசுக்கிடையிலான தொடர்புகள் குறித்தான முழுமையான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டும்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் துணைபோகும் சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri