கால்நடைகளை பாதுகாப்பதற்கு விரைவில் நடவடிக்கை: அங்கஜன் உறுதி
கால்நடைகளை பாதுகாப்பதற்கு இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் மேய்ச்சல் தரை இல்லாமையினால் மாடுகளை இழந்துவரும் பண்ணையாளரான தங்கவேலு சுரேந்திரனை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சருடன் பேசிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் மேய்ச்சல் தரை இல்லாமையால் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் பாதிக்கப்பட்ட பண்ணையாளரை இன்று பகல் சந்தித்தார். அதன்போது கால்நடை பண்ணையாளர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது தமக்கு நிரந்தரமாக மேய்ச்சல் தரை ஒன்றை அமைத்த தருமாறுமாறு, தொடர்ந்தும் வருடாவருடம் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வருடம் வாழ்வாதாரத்தையே இழந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கால்நடை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு நிலைமைகளை தெளிவு படுத்தினார்.
இராஜாங்க அமைச்சர் இவ்வாரத்திற்குள் தீர்வு பெற்று கொடுப்பதாக தெரிவித்ததாக அங்கஜன் இராமநாதன் இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராஜாங்க அமைச்சருக்கு தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் விளங்கப்படுத்தியுள்ளேன். இவர்களிற்கான நீண்டகால திட்டமாக மேய்ச்சல் தரவை ஒன்றை அமைப்பது தொடர்பில் அதற்கான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
உடனடியாக இந்த கால்நடைகளை காப்பாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் தேவை என்ற அடிப்படையில் அமைச்சருக்கு தெரிவித்து அமைச்சர் உடனடியாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி இந்த வாரத்திற்குள் அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக சொல்லியிருக்கின்றார்.
சேலைன்களை கொடுப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் புற்களையாவது மற்ற மாவட்டங்களிலிருந்து எடுத்து கொடுக்க கூடிய வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சிறுவயதிலிருந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தங்கவேலு சுரேந்திரன் என்பவர் 500க்கு மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றார். அவற்றில் இதுவரை 7 மாடுகள் இறந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் சில மாடுகளிற்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றார். இதுபோன்று பலரது கால்நடைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் கிளிநொச்சி கால்நடை வைத்திய அதிகாரிகள் கால்நடைகளை பார்வையிட்டு சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமது பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளிற்கு சிகிச்சை வழங்குவதற்கான பெரும் தொகை நிதியினை செலவு செய்ய வேண்டிய நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமது மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் மேய்ச்சல் தரை இல்லாத நிலைமை காணப்படுவதாகவும், மீள்குடியேறிய காலப்பகுதியிலிருந்து அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கு தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நிலையியே தமது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதாகவும், மேய்ச்சல் தரைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாதிக்கப்பட்ட தங்கவேலு சுரேந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.