சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன் வசதியாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.