இலங்கையின் அறிவிப்பை வரவேற்கும் சர்வதேச நாணய நிதியம்
இலங்கை, அதன் முக்கிய உத்தியோகபூர்வ கடனளிப்பவர்களுடனான தனது கடன் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.
கடன் ஒப்பந்தங்களை இறுதி செய்வது ஒரு முக்கிய மைல்கல் என்றும், கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இலங்கையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றும் நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர்(Peter Breuer) தெரிவித்துள்ளார்.
விரைவான முன்னேற்றம்
இந்தநிலையில், எதிர்காலத்தில் வெளி தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளை எட்டுவதில் விரைவான முன்னேற்றம் இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நிலையை ஸ்திரப்படுத்தல்
2024 ஜூன் 26 அன்று, உத்தியோகபூர்வ கடனளிப்பவர் குழு (OCC) மற்றும் சீனா எக்சிம் வங்கியுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்தது.
இது சமீபத்திய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நாட்டின் நிதி நிலையை ஸ்திரப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றங்களை குறிப்பதாக பீட்டர் ப்ரூயர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |