இலங்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! இந்தியாவை அடுத்து சீனாவும் பச்சைக் கொடி - IMFஇற்கு பறந்த தகவல்
இலங்கையின் கடன் தொடர்பான பத்திரத்திற்கு உத்தரவாதம் வழங்குவதாக சீனா உத்தியோகபூர்வமான கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா வழங்கியுள்ளது.
சில தினங்களுக்கு இந்தியா உத்தரவாதம் வழங்கியிருந்த நிலையில் சீனாவின் உறுதிப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்டைய பொருளாதார பலமிக்க இரு நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளமையினால் விரைவில் இலங்கைக்கான கடன் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.