சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போர் அந்த பிராந்திய நாடுகளில் “கடுமையான தடைகள்” ஏற்படுத்தியதுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தையும் மங்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
190 உறுப்புநாடுகளுடன் இணைந்து உலக பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் இந்த அமைப்பு, தற்போதைய சூழ்நிலை “உயர்ந்த விலைகள் மற்றும் மந்தமான வளர்ச்சி” நோக்கிச் செல்கிறது என தெரிவித்துள்ளது.

சரக்கு போக்குவரத்து பாதைகள் மாற்றம், கப்பல் போக்குவரத்து தாமதம், விமான சேவைகள் குறைவு, காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பு, பொருட்கள் விநியோகத்திற்கு கூடுதல் நேரம் போன்ற விநியோக சங்கிலியில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் உலக வர்த்தகத்தில் பெரும் சவால்களை உருவாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், உலகளாவிய பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, உலகளவில் அனுப்பப்படும் உரப் பொருட்களின் சுமார் மூன்றில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக கடந்து செல்கின்றது. தற்போது இந்தப் பாதையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், உலக பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.