இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வு தொடர்பில் வெளியான தகவல்
கடனளிக்கும் நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட கொள்கை ரீதியான உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.
இது, இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வை அடுத்த மாதத்தில் பரிசீலிக்கும் வழியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி
இந்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பாரிஸ் க்ளப்பின் இணை தலைமை நாடுகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த உடன்படிக்கைகள், இலங்கையின் நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பரிசீலிக்க வழி வகுக்கும் என்று நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதிக்குள் நிர்வாக சபை, இந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.