பெருந்தொகை டொலரை பெற்றுக்கொள்ளவதில் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தொகையான 344 மில்லியன் டொலரை பெற இன்னும் பல மாதங்களுக்கு தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அடிப்படை நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் உடன்படுவதால், அந்த நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் உதவிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு கண்டிப்பாக கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
வரிச் சலுகை
இந்தநிலையில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ள வரிச் சலுகைகளை நீக்குவது தொடர்பான நிபந்தனை குறித்து சீனத் தூதரகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
வரிச் சலுகைகள் நீக்கப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் சீன முதலீடுகள் தொடர்பாக அந்நாடு கடுமையான முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவையும், இலங்கை விமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் மின்சார சபை உள்ளிட்ட நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.
