ஒட்டுசுட்டானில் இருந்து சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் கைது
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் 10ஆம் கட்டை பகுதியில் தேக்கு மர கடத்தலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
10ஆம் கட்டை, தேங்கங்காட்டுப் பகுதிக்குள் நேற்றைய தினம் பார ஊர்தி ஒன்று நுழைந்துள்ளமை தொடர்பில் மாங்குளம் வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்களை அறுத்து பார ஊர்தியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்கள் மர கடத்தலுக்கு பயன்படுத்திய பார ஊர்தியும், 29 தேக்கு மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் ஒட்டுசுட்டானில் இருந்து எரு ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவயவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வனவளத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.







