சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: நால்வர் கைது (Photos)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இடம்பெற்ற இக்கைது சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் டி.என்.ஏ.தசநாயக்கவின் தலைமையில் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமு ஓயாவின் கிளை ஓடை ஒன்றில் பாரிய சூழல் சீர்கேடு ஏற்படும் வகையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக மிகவும் ரகசியமான முறையில் இவ்வாறு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் இவர்கள் ஈடுபட்டிருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வருடன், கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதானவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 23ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
