திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் கடற்கரையை ஒட்டி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு மீன்வாடி (கட்டுமானம்) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நேற்று அகற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அகற்றும் நடவடிக்கைக்கான பின்னணி
திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 23, 2025 அன்று, குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவை வழங்கியிருந்தது.
சட்டமீறலுக்கான காரணம்
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டப்படி, கரையோரப் பிரதேசத்தில் இருந்து 300 மீற்றருக்குள் எந்தவிதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதானாலும் ஆணையாளர் நாயகத்தினுடைய அனுமதி பெறப்பட வேண்டும்.
அனுமதி பெறாமல் கட்டடம் தொடங்கப்பட்டதால், அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. அதையும் மீறி பணிகள் தொடர்ந்ததால், கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரமும், நீதிமன்றக் கட்டளையின் பிரகாரமும் இந்தக் கட்டடம் அகற்றப்பட்டது.
இந்தச் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகளும் பிரதேச செயலகம் உட்பட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
அகற்றப்பட்டபோது பிரசன்னமானவர்கள்
திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் இந்த அகற்றல் நடவடிக்கையின் போது பிரசன்னமாகியிருந்தனர்.
அதிகாரியின் வேண்டுகோள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்படும் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இனிவரும் காலங்களில் அனுமதியைப் பெற்று மட்டுமே கட்டடங்களை அமைக்குமாறு பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குரிய கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தீபராஜ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
கட்டட உரிமையாளரின் கோரிக்கை மற்றும் பாதிப்பு
அகற்றப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் மனோச் இது குறித்துத் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் தற்காலிக கொட்டில் அமைத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், 25க்கு மேற்பட்ட படகுகளின் பொருட்களை இங்கே பாதுகாத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கான அனுமதியை வழங்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து திணைக்களங்களுக்கும் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பதிலோ, மாற்றுத் திட்டங்களோ வழங்கப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.
இந்த மீன்வாடி அகற்றப்பட்டதன் மூலம், இதை நம்பித் தொழிலில் ஈடுபடுகின்ற 50-க்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது தொழிலை அங்கே நடத்துவதற்கு தற்காலிக கொட்டிலாவது அமைத்துத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.





2 வார முடிவில் காந்தாரா Chapter 1 படம் செய்த தெறிக்கும் வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா? Cineulagam
