நாடாளுமன்றில் பிரதேசவாதம் பேசும் கோமாளி: இளங்குமரன் எம்பியின் பகிரங்க கருத்து
தமிழர்களின் மதிப்பை சீர்குலைப்பதற்கு கோமாளியொன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது, முகப்புத்தக கணக்கில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், "இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது.
பிரதேசவாதம்
பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்ககூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.
இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர்.
எனவே, இணைந்துவாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம். தென்னிலங்கையில் மகிந்தவும், அவரின் சகாக்களும் செய்த அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri
