வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!
யாழ்ப்பாணம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிட்டு பூங்கா முன்றலில் இருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று, மனித புதைகுழிகள் காணப்படும் செம்மணி பகுதிக்கு அண்மையாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மானிப்பாய்
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்று வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம் நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பங்களை பதிவு செய்தனர்.
செய்தி-கஜி
மட்டக்களப்பு
சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து காந்திபூங்காவினை நோக்கி பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர்நீர்த்த உறவுகள் மற்றும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களை தேடி உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பேரணியானது ஆரம்பமானது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் நீதிக்கோரிக்கையினை சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் பேரணியானது மட்டக்களப்பு நகரை நோக்கிச்சென்றது.
ஆயிரக்கணக்கான வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்களை எந்தியவாறும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







