அளவை மீறி செலவு செய்தால் பணம் கிடைக்காது:அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள திறைசேரி
அனுமதிக்கப்பட்ட வரையறையை மீறி செலவிடும் பணம் தொடர்பான சிக்கலை தீர்க்க முடியாது போனால், திறைசேரியிடம் இருந்து பணம் கிடைக்காது எனவும் செலவுக்கான காரண விளக்கங்களை முன்வைக்க கூடாது எனவும் திறைசேரி, சகல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
செலவுகளை கட்டுப்படுத்துவது அடிப்படையான தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால், உரிய அடையாளம் காணப்பட்ட நோக்கங்களுக்காக மாத்திரமே பணம் செலவு செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் திறைசேரி அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, காலாண்டு அடிப்படையில் நிதியை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால், அனைத்து அரச நிறுவனங்களும் தமது செலவுகளை திட்டமிட வேண்டும்.
அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ஒதுக்கப்பட்டுள்ள நிதி அளவுக்குள் செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிய வேலைத்திட்டங்கள் அல்லது புதிய அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது எனவும் திறைசேரி அறிவித்துள்ளது.
