அரசியலில் இருந்து முற்றாக விலகி விடுவேன்! வர்த்தக அமைச்சர் வெளியிட்ட தகவல்
தனது நற்பெயருக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி, தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வெள்ளைப் பூண்டு இறக்குமதி மற்றும் விநியோகத்தில் மோசடி நடந்துள்ளதாக துஷான் குணவர்தன தெரிவித்துள்ளதன் காரணமாக. தனது நற்பெயருக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள அவபெயரை ஈடுசெய்ய தான் கோரியுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்த தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அமைச்சர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே குறித்த மோசடியுடன் தனது பெயரை சம்பந்தப்படுத்தும் அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக பந்துல குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அரசாங்க தரப்பில் நியாயம் கிடைக்காது போனால், அரசியலில் இருந்து விலக போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த மோசடியுடன் தனக்கோ தனது குடும்பத்தை சேர்ந்த எவருக்கோ தொடர்பு இருப்பதை ஒப்புவித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவியில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலில் இருந்தே விடை பெறுவதாக பந்துல குணவர்தன (Bandula Gunawardena) அறிவித்துள்ளார்.