பிக்கு ஒருவர் வழங்கிய மூன்று கோடி ரூபாய் பணத்தை நிராகரித்தேன் - சந்திரிக்காவின் நெகிழ்ச்சியான பதிவு
ஜனாதிபதியாக தான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, அங்கு வசித்து வரும் பிக்கு ஒருவர் தனக்கு மூன்று கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், அதனை தாம் மிக மரியாதையுடன் நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) தெரிவித்துள்ளார்.
தனது கணவரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகுமாரதுங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நான் ஜனாதிபதியாக பதவிக்கு வகிக்கும் போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். அங்கு என்னை சந்திக்க வந்திருந்த மகாயான பௌத்த பிக்கு ஒருவர் சந்திப்பின் இறுதியில் மூன்று கோடி ரூபாய் இலங்கை ரூபாவை வழங்குவதாக என்னிடம் பொதி ஒன்றை வழங்கினார்.
நான் அந்த பரிசை மிக மரியாதையுடன் நிராகரித்தேன். அப்போது அந்த பிக்கு அவமகிழ்ச்சிக்கு உள்ளானார். இந்த நிலைமையை புரிந்துக்கொண்ட அருகில் இருந்த பிரதியமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இந்த பணத்தில் விஜயகுமாரதுங்கவின் ஊரில் அவரது பெயரில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்கலாம் என யோசனை முன்வைத்தார்.
சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையின் கடந்த கால கதை இதுதான். தற்போது நான் எனது நேரத்தில் குறிப்பிடத்தக்களவு காலத்தை அந்த வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செலவிட்டு வருகின்றேன்.
விஜயகுமாரதுங்கவுக்கு செய்யும் பலனுள்ள புண்ணிய கர்மம் எனக் கருதி எதிர்காலத்திலும் அந்த வைத்தியசாலையின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயப்படுவேன்.
விஜய உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என முன்னாள் ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.