வழக்கு தீர்ப்புக்கு பின்னர் அனைத்தையும் இழந்தேன்:ரஞ்சன் ராமநாயக்க
உயர் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்புக்கு பின்னர் அனைத்தையும் இழந்து விட்டதாகவும் தான் எப்போது மக்களின் பக்கமே இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்பை சிறையில் அடைக்க முடியாது
மக்களின் அன்பை சிறையில் அடைக்க முடியாது என்பதை சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தான் புரிந்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் நான் அனேக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானேன். சில சிறைச்சாலை அதிகாரிகள் என்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரிய கஷ்டங்களுக்கு உள்ளாகினர்.
வழக்கு தீர்ப்பின் பின்னர் நான் அனைத்தையும் இழந்தேன்.இருப்பதற்கு ஒரு இடமில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து வெளியிட்ட ரஞ்சன்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் ராமநாயக்க, நிபந்தனையுடன் ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் இருந்து வெளியில் வந்த ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.