கோட்டாபய அப்படியொரு முடிவை எடுப்பார் என்று நம்பவில்லை - அமைச்சர் பிரசன்ன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அப்படியொரு முடிவை எடுப்பார் என்று தாம் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தார்.
எனவே, அவர் போராளிகளுக்கு பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பு
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இடைக்கால அரசாங்கம் அல்லது இடைக்கால நிர்வாகத்தை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது.
நாடு டொலர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது. இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன 125க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் அந்த பெரும்பான்மை பெரும் பலமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.