இலங்கை பொதுமக்கள் தொடர்பான மனித கடத்தல்! இந்தியாவில் ஒருவர் கைது
இலங்கை பொதுமக்கள் தொடர்பான மனித கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய ஒருவரை, இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
ஹாஜா நஜர்பீடன் எனப்படும் முகமது இம்ரான் கான் என்ற இவர், ஜூன் 2021 முதல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
கடந்த பல மாதங்களாக இவருடைய நடமாட்டத்தை கண்காணித்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் வசிக்கும் இம்ரான் கான், சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கிய கடத்தல்காரர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தேடப்பட்டு வருபவர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை நாட்டவரான ஈசனுடன் இணைந்து இம்ரான் கான், 38 இலங்கை பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல திட்டம் தீட்டியதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் கான் ஒரு முக்கியமானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே மங்களூரில் ஆவணங்கள் இன்றி கைது செய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் தொடர்பில், 2021 அக்டோபர் 5 ஆம் திகதியன்று, 'அய்யா' என்ற தினகரன், காசி விஸ்வநாதன், ரசூல், ஹூஸேன் மற்றும் அப்துல் முஹீது ஆகிய ஐந்து பேருக்கு இந்திய தேசிய புலனாய்வு பிரிவு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.