சலே கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமால் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று சுரேஷ் சலேவிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு அருகில் உள்ள ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக நேற்று (08) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளது.
சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றைய தினம் தம்மால் வர முடியாது எனத் தெரிவித்த அதிகாரிகள், பிறிதொரு தினத்தை கோரியிருந்தனர்.
இதற்கமைய, இந்த விசாரணைகளுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நிமால் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.