மஹா சிவராத்திரி விரதம்: பக்தர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்!
மஹா சிவராத்திரி விரதம் என்பது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சிவபெருமானை கௌரவிக்கும் வகையில் அனுஷ்டிக்கப்படுவதாகும்.
இதற்கமைய, நாளைய தினம் (26.02.2025) உலகலாவிய ரீதியில் இந்து மக்கள் உட்பட அனைவராலும் மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சிவராத்திரி விரதம், சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தையும் , சிவன் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்தும் சந்தர்ப்பத்தையும் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
முதல் நாள்
அந்தவகையில், பன்தர்கள், தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட வேண்டும் என வேண்டி சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரி என மரபு கூறுகின்றது.
குறித்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விட்டு விலகிப் போகும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் கூட சிவபெருமான் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சிவராத்திரி விரதத்தன்று கடைபிடிக்கப்பட வேண்டியவை என சில முக்கிய விடயங்களும் சமய நடவடிக்கைகளும் தமிழ் பண்பாட்டின்படி தொண்டு தொட்டு உள்ளன.
அதற்கமைய, சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறுநாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்தபின், சிவன் ஆலயத்திற்கு சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
அதேவேளை, ஆலயத்திற்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது எனவும் அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அங்கப்பிரதட்சணமாக வலம் வரக் கூடாது மற்றும் சுவாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன், முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
சிவபூஜை
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்கள் மேற்கொண்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து, முதல் ஜாமத்தில் அதாவது, மாலை 6 முதல் 9 மணி வரை, சிவனுக்கு பஞ்ச கௌவியத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.பின்னர், பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சிறுநீர் (கோமியம்) மற்றும் பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் கலந்த பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1) மற்றும் அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும்.
தொடர்ந்து, தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை செய்து படைத்து ரிக் வேதம் சொல்ல வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் அதாவது, இரவு 9 முதல் 12 மணி வரை, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயாசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் அதாவது, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை, தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து, நான்காம் ஜாமத்தில் அதாவது, அதிகாலை 3 முதல் 6 மணி வரை, கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியா வட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.
அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்கு சரி உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை..
இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும் என்பது மரபாகும். அதேவேளை, சிவராத்திரி தினத்தன்று, தமது வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்ளலாம்.
அதேநேரத்தில், சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுதல் மற்றும் திரைப்படங்கள் பார்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் ஓதுவதோ அல்லது யாரையாவது ஓத சொல்லி, கேட்கவோ வேண்டும். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில ஆலயங்களில் நடைபெறும். அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானித்தில் ஈடுபடலாம்.
நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும்.
"என் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்" என்று கூறி வழிபட வேண்டும்.
இந்து சமயத்தினதும் கலாசாரத்தினதும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உலகளவில் சிவனை எண்ணி அனுஷ்டிக்கப்படும் இந்நன்னாளில் அனைவரின் மனங்களும் தெளிவுபெற்று, வாழ்வு வளம் பெற பிரார்த்திக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam

இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு News Lankasri
