கண்டியில் ஊழியரை கடத்தி கொடூரமாக தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்
கண்டியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 20 வயதுடைய ஊழியரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றின் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன் போலி ஆவணங்களை தயாரித்து மாணவர்களை அனுமதிக்கும் குற்றச்செயல்களையும் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்குச் சொந்தமான கண்டி ரஜபிஹில்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் வரவேற்பாளராகப் பணியாற்றியவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்டதாக முறைப்பாடு
சம்பளம் வழங்கப்படாமையால் குறித்த இளைஞன் விடுதியை விட்டு வெளியேற விரும்புவதாகவும், உரிமையாளர் அதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இளைஞன் விலகல் கடிதத்தை கையளித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் கெப் வண்டியில் வந்து இளைஞனை பலவந்தமாக அதில் ஏற்றி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்பின்னர் ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், குறித்த வர்த்தகரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவு நிலைய பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நளீன் இந்திக்க உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |