நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள்
கண்டி, மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் ஊழியர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நோயாளி ஒருவரை அழைத்து வந்த ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஞாயிறு (29) முன்னிரவில் திடீர் நோய்வாய்ப்பட்ட திகணை பிரதேச இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் மெனிக்ஹின்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நோயாளியை வைத்தியசாலையின் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் போது குடிபோதையில் இருந்த வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதல் காரணமாக நோயாளியை அழைத்து வந்த பொதுமக்கள் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை
மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரும் குடிபோதையில் இருந்த நிலையில் அவரும் வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து கதிரை போன்ற கடினமான பொருட்களால் மூர்க்கத்தனமாக தம்மைத் தாக்கியதாக காயமடைந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி, காயமடைந்தவர்களை கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளனர்.
சம்பவத்தின் போது நோயாளியை அழைத்து வந்த பொதுமக்களின் வாகனங்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருதரப்பையும் விசாரணைக்குட்படுத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |